பெற்றோல் மற்றும் டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Reha
2 years ago
பெற்றோல் மற்றும் டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர

இன்றைய தினம் மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பமாகும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் கடந்த நாட்களாக டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு அந்த பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோலும் விநியோகிக்கப்படுதாகவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருளை கொண்டு செல்லும் தாங்கி ஊர்திகளை சில குழுக்கள் இடைமறித்து தங்களுக்கு தேவையான இடங்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு அச்சுறுத்தல் விடுக்கின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் தாங்கி ஊர்திகளுக்கு தீ வைப்பதாக குறித்த குழுக்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றன.

இந்தநிலை தொடருமாயின் எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகளின் பாதுகாப்பு கருதி எரிபொருள் விநியோகப் பணிகளை இடைநிறுத்த நேரிடும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக கொழும்பு மாவட்டத்தில் 7 நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரைக்கமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொரளை டீ.எஸ் சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், மிரிஹானை – ஜூப்லிகனுவவுக்கு அருகில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வெள்ளவத்தை கூட்டுறவு எரிபொருள் நிலையம் என்பன அத்தியாவசிய எரிபொருள் விநியோகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயம் ஊடாக அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதி பத்திரத்தை பெற்று இந்த 7 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.