இன்றைய வேத வசனம் 22.05.2022: நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்
வாழ்க்கையில் பல தொடர்புகள், சந்திப்புகள் அன்றாடம் இருந்தாலும் ஒருசில இணைப்புகள் (Connection) மட்டுமே உறவாக மாறி, இருதயத்தில் இடம் பிடிக்கும்.
மனதுக்கு பிடித்தவர்களோடு இணைந்து மணிக்கணக்கில் பேசும் மனிதர்கள் ஏராளம். இந்த இணைப்பு (Connection) நல்ல நண்பர்களோடு கிடைக்கும் போது பலர் பல வெற்றிப்படிகளை அடைந்து முன்னேறுகின்றனர்.
ஆனால் சில தவறான இணைப்புகள் (Connections) கட்டுப்பாட்டையே மீறி தவறான பாதைக்கு உங்களை எடுத்துச் சென்று உருகுலைத்துவிடும் என்பது உண்மை.
நல்ல இணைப்புகள் நீண்டநாள் தொடர்கிறது, சில இணைப்புகள் பாதியிலே துண்டிக்கப்பட்டு முடிவடைகிறது.
இந்த உலகத்தில் உள்ள மனிதனோடு மனிதன் கொள்ளும் ஒவ்வொரு இணைப்பும் ஏதோ ஒரு காரணத்தால் துண்டிக்கப்படுகிறது அல்லது சரியாக செயல்படாமல் போகின்றது. அதனால் பிரச்சனை, குழப்பம், சோர்வு, மற்றும் வேதனை தான் மிச்சம்.
இன்றைக்கு உங்களுடைய இணைப்பு எப்படிப்பட்டது என்பதை யோசித்து பாருங்கள். நாம் வாழும் அதிவிரைவு உலகில் சக மனிதர்களோடு இணைப்பு என்பது எளிதில் ஏற்படுகிறது.
ஆனால் உங்களை உண்டாக்கிய தேவனோடு உங்கள் இணைப்பு இருக்கிறதா? உங்கள் தேவனையும் இணைக்கும் பாலம் தான் என்ன? அந்த இணைப்பில் தடங்கல்கள் ஏற்படுமா?
வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவரையும், சாதாரண மனிதனாகிய உங்களையும் இணைக்கும் ஒரே இணைப்பு "ஜெபம்". பரலோகத்தை இயக்க வைக்கும் ஒரே ஆயுதம் ஜெபம்.
தேவனோடு உன் இணைப்பு இன்றைக்கு சீராக இருந்தால்; நீங்களும் சிகரம் தொடும் சாதனைகளை செய்து தேவனுடைய நாமத்தை உயர்த்தலாம். இயேசுவை அறியாமல் நரகம் செல்லும் வாலிபர்களின் வாழ்க்கையை இயேசுவின் பக்கம் திருப்பலாம்.
தானியேலின் இணைப்பு சீறும் சிங்கத்தின் சுபாவத்தையே மாற்றிவிட்டது.
எஸ்தரின் இணைப்பு யூத ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றியது.
நெகேமியாவின் இணைப்பு இடிந்த மதில்களை மீண்டும் கட்டி எழுப்பியது.
ஆனால் இந்த ஜெபமாகிய வல்லமையான இணைப்பைத்தான் சத்துரு உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் துண்டித்து உங்களை செயல்படாது முடக்கிக் கொண்டிருக்கிறான்.
தேவஜனமே! தேவனோடு உங்கள் இணைப்பாகிய ஜெபத்தை பெலப்படுத்துங்கள்! நீங்களும் தானியேலாய் திகழ உன் இணைப்பாகிய ஜெபத்தை தீவிரப்படுத்துங்கள்!! ஆமென்!!
யோவான் 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்