மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் - சமந்தாபவர் பிரதமர் ரணிலிடம் வலியுறுத்தல்

#SriLanka #Ranil wickremesinghe
மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் - சமந்தாபவர் பிரதமர் ரணிலிடம் வலியுறுத்தல்

இலங்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு மிகவிரைவான அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பணிப்பாளர் சமந்தாபவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கு நிலையில் (24) செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பணிப்பாளர் சமந்தாபவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றது. 

அக்கலந்துரையாடல் தொடர்பில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சமந்தாபவர் மற்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடலில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் எத்தகைய பிரதிபலிப்பைக் காண்பிக்கப்போகின்றது என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை இம்மாதத்தொடக்கத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை நிலை காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் சமந்தாபவர் தனது அனுதாபத்தை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி இலங்கை மக்களுக்கான தனது தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்திய அவர், நெருக்கடிநிலை காணப்படினும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் அதிகரித்துச்செல்லும் உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றின் விலைகள் உள்ளடங்கலாக பாரிய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு அவசியமான  நடவடிக்கைகள் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் சமந்தாபவர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக இலங்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு மிகவிரைவான அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அத்தோடு தற்போதைய கடினமான சூழ்நிலையில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி - 7 நாடுகள் உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களுடன் நெருங்கிப்பணியாற்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் தயாராக இருப்பதாகவும் சமந்தாபவர் பிரதமரிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.