கடதாசி தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற ஆவணங்களை கடதாசிகளில் பிரதியெடுப்பதை தவிர்ப்பதற்கு தீர்மானம்!

கடதாசிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற ஆவணங்களை கடதாசிகளில் பிரதியெடுப்பதை தவிர்ப்பதற்கு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் வருடாந்த அறிக்கைகள் உட்பட அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற செலவுகளை குறைப்பதற்கும், சுற்றுசூழல் பாதிப்பை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடதாசி மற்றும் அச்சிடுவதற்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தேவையான அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பான ஏனைய ஆவணங்களை மென் பிரதிகளாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு சிறப்பு இணைய பக்கத்தை சேர்க்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.



