அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிக விரைவில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் கடந்த சில மாதங்களாக அரசியல் செயற்பாடுகளில் அதிருப்தியுற்று ஒதுங்கியே இருக்கும் நிலையில் மிக விரைவில் அவரும் அரசியலை விட்டும் ஒதுங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரம் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தின் பின்னர் பொதுஜன பெரமுண கட்சியில் எஞ்சியுள்ளவர்களைக் கூட்டிணைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டு வருகின்றார்.
அதற்காக பசில், நாமல், மஹிந்த முக்கூட்டு அணி தற்போதைக்கு கணிசமான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துவிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு கணிசமானவர்கள் அரசாங்கத்துடன் இணையும் போது சஜித்தின் ஆட்பலம் குறைந்த பின் நாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாகும்.