அதிவேக நெடுஞ்சாலையில் ஜெட் வேகத்தில் பறந்த கார்: சாரதி கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 196 கிலோமீற்றர் வேகத்தில் சொகுசு காரை ஓட்டிச் சென்ற நபரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை கைது செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தொடங்கொட இடைநிலைப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாலி தசநாயக்க தலைமையிலான அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக பயணித்த வாகனத்தை ஸ்பீடோமீட்டரை பயன்படுத்தி சோதனையிட்ட போது சந்தேக நபர் மணிக்கு 196 கிலோமீற்றர் வேகத்தில் பென்ஸ் காரை ஓட்டிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டி இடைப்பாதையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து மாற்றுத் தளங்களுக்கும் அறிவித்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேருவளை கங்கணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



