பேன் மற்றும் ரத்தசோகையால் உயிரிழந்த 9 வயது சிறுமி-தாய் மீது கொலை வழக்கு

அமெரிக்காவில் தலையில் அளவுக்கு அதிகமான பேன் இருந்ததால் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க நாட்டில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் டுக்சன் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அச்சிறுமிக்கு ரத்தசோகை இருந்திருக்கிறது. இதனால் சிறுமி கடும் அவதியுடன் இருந்திருக்கிறார்.
9 வயதான சிறுமிக்கு ரத்தசோகை அதிகரித்தது. எனினும், சிறுமியின் பாட்டியும் அம்மாவும் சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியின் தலையில் அதிகமாக பேன் இருந்திருக்கிறது. எனவே, அவரின் தலையில் சிறிதாக காயங்களும் உண்டானது. அதன்மூலம் தொற்று உண்டாகி முகத்திலும் தொற்று பரவியுள்ளது.
முகம் முழுவதும் பாதிப்படைந்து மோசமான நிலையில் இருந்திருக்கிறது. அப்போதும் சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே வைத்துவிட்டு ஆண் நண்பருடன் வேறு வீட்டில் வாழ்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு ரத்த வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டிருக்கிறார்.
மோசமான நிலையில் வீட்டிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் பாட்டியும் அம்மாவும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று தெரியவந்தது. எனவே இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



