அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட எலான் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்யும் முயற்சியில் வெற்றி அடைந்தால், பணிக்குறைப்பு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போலிக் கணக்குகள் தொடர்பான தரவுகளை வழங்காத பட்சத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யும் உடனடிக்கையில் இருந்து விலகிவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறார்.
ஏற்கெனவே டுவிட்டரில் 9.2% பங்குகளை எலான் மஸ்க் வாங்கிவிட்டார். ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டொலருக்கு வாங்க எலான் மஸ்க் முயற்சித்து வருகிறார்.
இதற்கான ஒப்பந்தம் இன்னும் இறுதிசெய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக டுவிட்டர் ஊழியர்களை எலான் மஸ்க் காணொளி வாயிலாக சந்தித்து உரையாடினார்.
இதன்போதே, செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என சூசகமாக தெரிவித்த அவர், டுவிட்டர் நிறுவனத்தின் வருவாயை விட செலவுகள் அதிகமாக இருப்பதாகவும், இது நல்ல சூழ்நிலை இல்லை எனவும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் எலான் மஸ்க் பேசியுள்ளார்.
மேலும், டுவிட்டர் பயனர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்து 100 கோடியாக உயர வேண்டும் என எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.



