எலான் மஸ்க் குறித்து குற்றச்சாட்டு கடிதம் - ஸ்பேஸ் எக்ஸ் பணியாளர்கள் பணி நீக்கம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பணியாளர்கள், தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதம் எழுதியதால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கிய நிலையில் மொத்தமாக அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கப்போவதாக கூறியிருந்தார்.
ஆனால், அதன்பின் அத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் ஒன்றிணைந்து, அந்நிறுவனத் தலைவரான க்வின் ஷாட்வெல் என்பவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் எலான் மஸ்க் தீமை தரக்கூடிய வகையில் மேற்கொண்ட ட்விட்டர் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, அவரிடமிருந்து விரைவில் பிரிந்துவிட வேண்டும் எனவும் சமீப நாட்களில் பொது இடங்களில் அவரின் செயல்பாடுகளால் தங்களுக்கு கவனச்சிதறலும் பிரச்சினைகளும் உண்டாகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து கடிதம் எழுதி மற்ற பணியாளர்களிடம் கையொப்பம் வாங்கி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் அந்த கடிதத்தில் கையொப்பமிட்ட பணியாளர்கள் பலரும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.



