உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் - இரா.சாணக்கியன்

Kanimoli
2 years ago
உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் - இரா.சாணக்கியன்

இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் அரச தலைவரை சந்தித்த போது அவரிடம் மிக முக்கியமாக சொன்ன விடயம், வடக்கு, கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக எங்களது புலம் தமிழர்கள் உதவி செய்வார்கள். ஆனால் அதற்கு நீங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வினை தர வேண்டும் என கூறியிருக்கின்றோம்.

ஆனாலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. எனினும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கத்தினை காப்பாற்ற நாம் முயற்சிப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

இன்று எங்களுடைய அரசியலை பொறுத்தவரையில், தமிழர்களுக்கு இரண்டு வகையான அரசியல் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முதலாவது எங்களது கடந்த கால வரலாறுடன் நாங்கள் எவ்வாறு முகங்கொடுப்பது.

அதாவது 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியும், அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விடயம், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் 2009 இற்கு முதல் இருந்தே தொடர்கின்ற விடயங்கள்.

இவற்றில் எதிர்காலத்தில் எங்களுக்கு இருக்கின்ற விடயங்களை பார்த்தால் அரசியல் தீர்வு என்ற விடயம் எங்களுக்கு மிக மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இவற்றை நாம் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும்.

நாங்கள் தொடர்ச்சியாக அரச தலைவரை சந்தித்து பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசி வருகின்றோம். குறிப்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளில் இவையும் உள்ளடங்குகின்றன.

நாங்கள் குருந்தூர் மலையினை சென்று பார்வையிட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி அரச தலைவர் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை செய்து வருகின்றார்.

கோட்டாபய ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பகுதிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் எங்கெல்லாம் காணி அபகரிப்பிற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்திருக்கின்றேன். அவற்றினை எதிர்த்திருக்கின்றேன். இனியும் இருப்பேன்.

எங்களுடைய அரசியல் தீர்வின் ஊடாகவே இவற்றினை மாற்றியமைக்க முடியும். எங்களுடைய கைகளில் எங்களுடைய அரசியல் அதிகாரம் இருந்தால் நாங்கள் இதனை மாற்றியமைக்கலாம். எனினும் இது நீண்டகால போராட்டமாக இருகின்றது. இலங்கை வரலாற்றில் இதுதான் எங்களுடைய காலமாக இருக்கலாம்.

எங்களது எதிர்காலம் எப்படியாக இருக்க வேண்டும் என சொன்னால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும். முஸ்லீம்களிடமிருந்து கிழக்கினை மீட்க வேண்டும் என கூறி நாடாளுமன்றம் வருகை தந்த பிள்ளையானும், வியாழேந்திரனும், நஸீர் அஹமட்டுன் இணைந்து தற்போது பணியாற்றுகின்றனர்.

எனவே அரசியல் இலாபங்களுக்காக வாய்களில் வந்த அனைத்தினையும் சொல்லக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கும் இருக்காது முஸ்லீம் மக்களுக்கும் இருக்காது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!