IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

சர்வதேச நாணயச் சபையின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கத்தில் வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினர் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து அரச தலைவர்களுடன் ஆழமாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே 9 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரையிலான முதற்கட்ட மெய்நிகர் கலந்துரையாடலின் போது ஏற்படுத்திக்கொண்ட முன்னேற்றகரமான நகர்வுகளை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஆதரிக்கப்படக்கூடிய பொருளாதார வேலைத்திட்டம் பற்றிய விவாதங்களைத் தொடரும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இராணுவ அல்லது பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட தற்போது கைவிடக்கூடிய அல்லது பிற்போடக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்இ அரசு இயந்திரத்தின் சுமையான விடயங்கள் மற்றும் எரிபொருள், எரிவாயு, உணவு, உரம் மற்றும் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



