நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையிலேயே குறித்த மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மே 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால், காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தின் சந்தேகநபராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதனை அடுத்து அவர் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் அவரை நீதிமன்றில் சரணடைய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவருக்கு அன்றைய தினமே பிணை வழங்கப்பட்டிருந்தது.