முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு

அனுமதி பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் பறங்கியாற்று பகுதியில் மணலுடன் மூன்று உழவு இயந்திரங்கள் நேற்று(21) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த வாகன சாரதி மூவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாண்டியன்குளம் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து விதிமுறையை மீறி வேறோர் இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மூன்று உழவு இயந்திரங்களும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியிடங்களுக்கு மாந்தை கிழக்கு மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இருந்தும் மணல் வளங்கள் அகழப்பட்டு ஏற்றப்படுகின்றன என்று பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



