டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.
இவர் சமீபத்தில் டுவிட்டரின் 9.2 சதவிகிதம் பங்குகளை வாங்கினார். இதனையடுத்து 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில காரணங்களால் எலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி டுவிட்டர் பயனாளர்கள் குறித்த விவரங்கள் மற்றும் போலியான கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் குறித்த எண்ணிக்கை போன்றவற்றை டுவிட்டர் நிர்வாகம் தர மறுத்தால் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டு விடுவேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க்கின் வழக்கறிஞர்கள் டுவிட்டர் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் டுவிட்டரில் போலியான கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை தர மறுத்தால் டுவிட்டர் நிறுவனம் தன்னுடைய கடமைகளை மீறிவிட்டதாக கூறி, நிறுவனத்தை வாங்கும் திட்டமானது கைவிடப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.



