இன்றைய வேத வசனம் 02.07.2022: இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
வேதாகமத்தின் திறவுகோல் வசனமான யோவான் 3:16 ஐ அனுபவிக்காத விசுவாசிகள் எவரும் இருக்கவே முடியாது. கடவுள் தான் படைத்த மனிதனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடித்தார். அதைத்தான் அவ்வசனம் சொல்கிறது.
'இவ்வளவாய் அன்புகூர்ந்தார்' என்பதின் ஆழம் அளவிடப்பட முடியாதது!
ஒரு நாளின் இரவுப்பொழுதில் நிக்கொதேமு என்ற பரிசேயன் அவரிடம் வந்து, ஆரம்பித்துவைத்த உரையாடலின் நடுப்பகுதியில் இயேசு கிறிஸ்து சொன்னதுதான் யோவான் 3:16.
இவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்பதை அதற்கு முந்தைய இரண்டு வசனங்களால் எவ்வளவாய் என, அவர் காட்சிப்படுத்துகிறார்! அந்தக் காட்சி இதுதான்...
கானானை நோக்கிய பெரும் பயணத்தில், தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்த நெடும் வழிப் பிரயாணம் மனமடிவை உண்டாக்கியது.
அப்படிப்பட்ட சோர்வான தருணங்களில் அவர்கள் உடனடியாக மோசேயைப் பழிப்பார்கள், தேவனைத் தூஷிப்பார்கள்.
பொதுவான மனித பலவீனம் அது! ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்வதை கடவுள் ஒருபோதும் விரும்பினதில்லை
கடவுளின் பெரும் வலக்கரத்தின் அதிசயமான நடத்துதலுக்குள் நாம் இருக்கும்போது ஆவிக்குரிய தலைவர்களையோ கடவுளையோ கேள்வி கேட்கவும் தூஷிக்கவும் துணியக்கூடாது!
ஆனால் இவ்விடத்தில் இஸ்ரவேலர்கள் தூதர்களின் உணவாகிய மன்னாவையும் அற்பமான உணவு என்றார்கள். அது மனதுக்கு வெறுப்பாக இருக்கிறது என்றும் கூறினார்கள். உடனடியாக அவர்களை தண்டிப்பதற்குக் கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினதினால் இஸ்ரவேலருக்குள் அநேகர் செத்துப் போனார்கள்.
கண் முன்பாக ஜனங்கள் கொத்துக் கொத்தாய் செத்து விழுவதை பார்த்ததும், உடனடியாக ஜனங்கள் நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாகப் பேசினதினால் பாவம் செய்தோம். இந்தச் சர்ப்பங்களுக்கு எங்களை மீட்டு காப்பாற்றும், தயவுசெய்து 'யாவே'யாகிய கடவுளிடம் விண்ணப்பம் செய்யும் என மோசேயிடம் சரணாகதி அடைந்தார்கள்.
மோசேயின் விண்ணப்பத்திற்கு மனமிரங்கிய கர்த்தர் அவர்கள் தப்பிக்கொள்ளும் ஒரு போக்கை உண்டாக்கினார். அதுதான் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம்.
சர்ப்பம் என்கிற வார்த்தை வேதப் புத்தகத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை ஒரு நல்ல பதம் அல்ல. அது பிசாசு, சாபம், பாவம், மரணம் என்பவைகளைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டது.
சர்ப்பத்துக்கும் மனுஷ குமாரனுக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு கிடையாது, தொடர்புபடுத்தவும் முடியாது.
சர்ப்பம் என்பது தந்திரமுள்ளது, விஷம் நிறைந்தது, அது உயிரைக் குடிப்பதற்காக வழியில் கிடப்பது. மொத்தத்தில் சர்ப்பம் என்றால் மரணம்!
ஆனால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்திற்கு தம்மை ஒப்புமையாக்கி, யோவான் மூன்றாம் அதிகாரத்தில் இயேசு பேசினது ஆழமான வேத சத்தியத்தை உள்ளடக்கியது!
ஏன் சர்ப்பத்தின் சாயலை செய்வதற்குத் தேவன் மோசேயை பணிக்கிறார்? ஒரு புறாவின் சாயலையோ, இல்லை, பறக்கும் கழுகின் செட்டைகளையோ உருவமாகச் செய்யச் சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் சர்ப்பத்தின் சாயலை அங்கே உருவமாகச் செய்யச் சொன்னதன் அர்த்தம் என்ன?
மனுக்குலத்தின் மீது ஏதேனில் ஏறிய சர்ப்பத்தின் விஷத்தை, வெண்கல சர்ப்பத்தை போல பாவ மனித சாயலாய் வந்த இயேசுகிறிஸ்து சிலுவையில் உயர்த்தப்படும் போது இறக்கி விடுகிறார் என்பதே அந்த ஆழம்!
சர்ப்பத்திற்குள் விஷம் இருக்கின்றது, அந்த விஷம் மரணத்தைப் பிறப்பிக்கிறது. ஆனால் சர்ப்பத்தின் சாயலில் உயர்த்தப்பட்டிருக்கும் வெண்கல சர்ப்பத்திற்குள் விஷம் இல்லை, ஆனால் நோக்கிப் பார்ப்பவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறது.
சுருங்கச்சொன்னால் சர்ப்பம் என்றால் மரணம். வெண்கல சர்ப்பம் என்றால் ஜீவன். சர்ப்பத்தினால் ஒரு மரத்தினடியில் வஞ்சிக்கப்பட்ட மனிதர்களுக்கு, உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம் போல கல்வாரியில் தூக்கப்பட்ட கிறிஸ்து ஜீவனை கொடுக்கிறார் என்பதே நல்ல செய்தி.
விஷம் நிறைந்த சர்ப்பத்தை போல அவர் பாவியாக அல்ல, விஷமில்லாத ஆனால் சர்ப்பத்தின் சாயலில் இருக்கும் வெண்கல சர்ப்பம் போல பாவியின் சாயலில் 'பாவமில்லாத இயேசு பாவமானவராய்' தூக்கப்பட்டார்.
அதைத்தான் வேத புத்தகத்தின் திறவுகோல் வசனங்களுக்கு முன்பதாக அந்த இரவு உரையாடலில் நிக்கொதேமு மற்றும் அவனோடு கூட கூடியிருந்தவர்களுக்கு இயேசு சொன்னார்.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும் அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்! இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்பதின் அர்த்தம் சிலுவையில் அடிக்கப்பட்ட நிலையில் பிதா தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு கொடுத்து விட்டார் என்பதில் முடிவடைகிறது!
இந்தக் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருடைய கடமை சர்ப்பம் தீண்டியதால் பாவத்தில் செத்துக் கொண்டு இருக்கும் மனிதர்களை கல்வாரியில் தூக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு நேராகத் திருப்புவதுதான்! என்பதை உணர்ந்து இன்றே செயல்படுங்கள். ஆமென்!
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (#யோவான் 3:16)