அமெரிக்காவில் கருக்கலைப்பு மருத்துவமனைகளுக்கு செல்வோரின் பாதுகாப்பிற்காக கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில், வேறு மாநிலங்களுக்கோ சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச் செலவை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வால்ட் டிஸ்னி கோ மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா' உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
கருக்கலைப்பு கிளினிக்குகளுக்குச் செல்லும் பயனர்களின் இருப்பிட வரலாற்றை நீக்குவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. கருக்கலைப்பு கிளினிக்குகள், குடும்ப வன்முறை முகாம்கள் மற்றும் தனியுரிமை கோரப்படும் பிற இடங்களுக்குச் செல்லும்போது பயனர்களின் இருப்பிட வரலாற்றை நீக்குவதாக கூகுள் அறிவித்தது



