கோத்தாபாய மக்களை குழிதோண்டி புதைப்பதாக திட்டம் - என்.விஸ்ணுகாந்தன்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் என்பதை யாரும் மறந்திவிட வேண்டாம் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“நாடு நாட்டினுடைய மக்கள் பாரியதொரு மரணப்படுகுழியை எதிர்நோக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அரச தலைவர் ஏன் எமது மக்களை வதைக்கின்றார் என்பதை இன்னமும் மக்களுக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அரச தலைவரின் திட்டம் என்ன? திட்டத்தை கொண்டு நடாத்துவதற்கு அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்திருக்கின்றார். மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் பிரதமர் ஊடாக தமக்கு ஏதோ நன்மை கிடைக்கும் என்று, ஆனால் எமக்கு தெரிந்த வகையில் அதற்கு சாத்தியமில்லை.
ஆனால் இதற்குள் என்ன சூழ்ச்சி நடக்கின்றது என எமது மக்களுக்கு இன்னமும் தெரியவில்லை. அரச தலைவர் தன்னை நல்லவராக காட்டுவதற்கு அங்கே பிரதமரை நியமித்தாரா? இல்லை இந்த நாட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கு பிரதமரை நியமித்தாரா என்று இன்னம் தெரியவில்லை.
நிச்சயமாக பிரதமர் அந்தப் பதவியில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் இருந்து நன்மைகளைப் பெற்றுக்கொடுத்தால் அந்த பெயர் அரச தலைவருக்கு போய்விடும் என்று சொல்லி தன்னுடைய ஆட்சியை கொண்டுவருவதற்கு பிரதமரும் கண்மூடித்தனமாக இருக்கின்றாரா என சந்தேகிக்க தோன்றுகின்றது.
இனிமேல் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி தேவையில்லை, ராஜபக்ஷ குடும்பம் பாரிய மோசடியை செய்துள்ளது. இதை இந்தக் குடும்பம் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
எங்களுடைய இலங்கை மக்கள் தேசிய கட்சி பகிரங்கமாக மக்களிடத்தில் மன்னிப்புக் கோருகின்றது, காரணம் இந்தக் குடும்ப ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்ததுடன், நாம் பொதுஜன பெரமுனவோடு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு பங்காளிக் கட்சியாக இருந்ததற்கும், மக்களை வாக்களிக்க தூண்டினோம், மக்களும் மனப்பூர்வமாக வாக்களித்தார்கள். அவ்வாறு மனப்பூர்வமாக வாக்களித்தமைக்கு இந்த அரச தலைவர் மக்களை பசியோடும் பட்டினியோடும் நடுத்தெருவில் விட்டுள்ளார் என்பதை நினைத்தால் வேதனையாகவுள்ளதென” தெரிவித்தார்.



