அமைதியான போராட்டங்களுக்கு ஆயுதப் படைகளைப் பயன்படுத்தக் கூடாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

கடந்த வாரம் காலியில் மேற்கொள்ளப்பட்டதை போன்று, அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது தடுக்கவோ ஆயுதப் படைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுள்ளது.
இல்லையெனில், எதிர்பாராத குழப்பநிலையையும் அமைதியின்மையையும் தடுக்கமுடியாது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி சட்டத்தரணிகள் சங்கம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில், இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுடன் படைத்தரப்பினர் மோதிக்கொள்வதை தவிர்க்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என்று அரச தலைவரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தகைய வன்முறைக்கு பொதுமக்களை உட்படுத்தும் தவறான அதிகாரிகளைக் கையாள்வதற்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் சங்கம் கேட்டுள்ளது.
இலங்கையின் காவல்துறையினரால் முக்கியமாக நிர்வகிக்கப்பட வேண்டிய விடயங்களில், படையினரை ஈடுபடுத்துவது பொருத்தமானதல்ல என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.



