இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனையும் 2023ல் 5,862 மில்லியன் டொலர் கடனையும் 2024ல் 4,916 மில்லியன் டொலர் கடனையும் 2025ல் 6,287 மில்லியன் டொலர் கடனையும் 2026ல் 4,030 மில்லியன் டொலர் கடனையும் 2027ல் 4,381 மில்லியன் டொலர் கடனையும் இலங்கை செலுத்த வேண்டும். அதாவது மொத்தமாக நாம் 28 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
இதுதான் உண்மை நிலை. இன்று நமது தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 140வீதமாகும்.
இன்று நமது வருமானம் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 7.3 வீதமாகும். 2026 ஆம் ஆண்டுக்குள் அதை 14 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
அத்தோடு, IMF உடன் இணைந்து 2032 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 95 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.



