சர்வதேச நாணய நிதியத்தினுடனான பேச்சு இணக்கம் இன்றி முடிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு

வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கைக்கு நிவாரணப் பொதியை வழங்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளை தொடர உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக அனைவரும் காத்திருப்பதாகவும், உண்மை நிலவரத்தை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது, இது மிகவும் பாரதூரமான நிலை என ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீபன் ஹான்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் 16 வேலைத்திட்டங்களை இணைத்துள்ளது, ஆனால் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.



