சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் கையிருப்பு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
பூநகரி வெட்டக்காடு பகுதியில் நேற்று(04) இரவு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 66ஆவது டிவிசன் பகுதியை சேர்ந்த இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டபோதே இந்த மீட்பு நடைவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் 65 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சள் மற்றும் 03 பைகளில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மஞ்சள் தொகை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



