சர்வகட்சி ஆட்சி அமைக்க பல அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இடையே அடிப்படை கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு அரசியல் கட்சிகளின் 39 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டதாகவும், 37 பேர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களும் அக்கட்சியைச் சேர்ந்த பல சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர்.
தேசிய மக்கள் படையின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகளில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அடிப்படை உடன்பாடு அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் ஓராண்டு அல்லது ஒன்றரை வருடங்கள் பணியாற்றி பின்னர் தேர்தலுக்குச் செல்லவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு 120 முதல் 140 எம்.பி.க்கள் கொண்ட குழுவின் ஆதரவைப் பெற முடியும் என கலந்துரையாடலில் இணைந்த பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.