அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கடந்த 4ம் திகதி அமெரிக்காவின் 246வது சுதந்திரதின பவனியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல நாட்டுத் தலைவர்கள் அமெரிக்க நிர்வாகத்தை விமர்சித்து வருகின்ற நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றில், “அமெரிக்காவில் எங்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இந்த ஆட்சிக் காலத்தில் காணப்படுகின்றது.
கடந்த ஆட்சியில் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தார்கள். இந்த ஆட்சி சுயநலமான ஆட்சி என ஜோ பைடனின் ஆட்சியை விமர்சித்திருந்தமை” குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த 4ம் திகதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்த விடயங்களாக, “மேற்படி நபர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கான ஆயத்தங்களை சுமார் பல வாரங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்ததாகவும், மேலும் அவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்திய போது பெண்களின் ஆடையையும், கையுறைகளையும் அணிந்திருந்ததாகவும், மற்றும் அவர் பாவித்த துப்பாக்கி சட்ட ரீதியாக அவருக்கு வழங்கப்பட்டமைக்கான ஆதாரம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது சுமார் 70 குண்டுகளை பிரயோகித்திருக்கின்றார் எனவும் பின்னர் மைதானத்தில் துப்பாக்கியை வீசி எறிந்து விட்டு மக்கள் கூட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார் எனவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.



