நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம்?தமிழர்களுக்கான அறிவிப்பு

Kanimoli
2 years ago
நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம்?தமிழர்களுக்கான அறிவிப்பு

எழுத்து மூலமான நிபந்தனைகள் ஏதுமற்ற நிலையில் சர்வ கட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவுக்குள் தமிழ் தலைமைத்துவங்கள் தம்மை அமிழ்த்துக் கொள்வது மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறேயாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது ஊடக அறிக்கையில் மேலும், ஒரு முக்கிய தருணத்தில் இப்போது நாமும், நமது நாடும் இருக்கின்றதென்பது நம் அனைவருக்கும் தெளிவு. வீழ்ச்சியின் இறுதிப் புள்ளியில் இக்கட்டான நிலையில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்து இன்னும் சரியான தெளிவு நமக்குக் கிடைக்கவில்லை.

ஆயினும் நாளுக்கு நாள் பிரச்சினையில் இருந்து விடுபடுதல் தொடர்பில் தமிழ் தேசிய தரப்புக்கான அழைப்பு அரசாங்கத்தின் பக்கமிருந்தும் எதிர்க்கட்சிகள் பக்கம் இருந்தும் அரசில் இருந்து வெளியேறியவர்களிடமிருந்தும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.

இப்போதுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் முக்கியமான மூன்று விடயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.

(1) முதலாவது நாடு எதிர்கொண்டுள்ள சமூகப் பொருளாதார அரசியல் நெருக்கடியில் இலங்கைப் பிரஜையாக நாம் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பது.

(2) இரண்டாவது தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் வெளிப்படையாக எடுக்க வேண்டிய மக்கள் சார்ந்த முடிவு பற்றியது.

(3) மூன்றாவது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக இந்நிலையை எதிர்கொள்ளும் போது உரிமைசார்ந்த தீர்வொன்றுக்காக தாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆதரித்த ஜனாதிபதி என்பதும் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் என்பதும் கடந்த காலம் முழுவதும் இறுமாப்புடன் முன் வைக்கப்பட்ட அரசியல் ரீதியில் மிகவும் பிரபலமான விடயமாகும்.

அதாவது சிறுபான்மை மக்களை மறுதலித்த தனிப்பெரும்பான்மையை முன்னிறுத்திய அரசியல் கொள்கையொன்றே வெளிப்படையாக அமுலாகத் தொடங்கியிருந்த பொழுதில்தான் மொத்த நாடும் சடுதியான வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தது.

பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல அரசியல் நிலைப்பாடுகளும் கட்சிகளும் தலைமைகளும் ஆதரித்த அதே மக்களால் ஒரேயடியாகப் புறந்தள்ளப்பட்டுள்ளது. பிரிவினையை முன்னுரிமைப்படுத்திய பெரும்பான்மை இறுமாப்புடன் கூடிய கம்பீரம் முகவரியிழந்துள்ளது.

நாட்டு மக்களாக அனைவரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கு இன நோக்குடன் செயற்பட்ட பெரும்பான்மையின மக்கள் வந்து இருக்கின்றார்கள். இந்நாட்டில் ஒருபோதும் சரிவடையாது கூர்ப்பு பெற்ற இன மேலான்மை முதற்தடவையாக தேவையில்லை என்ற நிலையில் மொத்த நாட்டினதும் நலனுக்காக ஓர் அரசியல் தீர்வு குறித்து எல்லாரும் குழம்பிப் போய் இருக்கும் நிலையில், இது வரை எடுத்த எல்லாவித நடவடிக்கைகளும் தோற்றுப் போய் இருக்கின்றன.

ஜனாதிபதி தோல்வியடைந்தவராக விடைபெறத் தயாரில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். அப்படியானால் அவரை பதவிக்குக் கொண்டு வந்த பெரும்பான்மை மக்களின் மனத் திருப்தியை வெல்ல அவர் மீளவும் முயற்சி செய்யப் போகின்றார் என்று அர்த்தம்.

ஆயினும் அது இப்போதைக்கு சாத்தியமில்லை எனவே எல்லா மக்களும் இணைந்த அரசியல் தீர்வு குறித்துப் பேசும் போது தத்தமது அரசியல் பதவிகளுக்காகக் காய் நகர்த்தும் சிறுபான்மை மக்களின் தலைமைகள் அதனை நியாயப்படுத்த வழிகளைத் தேடுவதிலும் அதை மக்கள் முன் நியாயப்படுத்துவதிலும் கவனங்கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பது கட்டாயம் தீர்வொன்றைக் கண்டடைய வேண்டியது. இப்போதுள்ள நாட்டின் பொருளாதார நெருக்கடியை அரசியல் ரீதியில் எதிர்நோக்கும் போது மிகவும் கவனமாக முன்னெடுக்க வேண்டிய விடயமாக இது இருக்கின்றது.

ஏனெனில் பொருளாதார நெருக்கடியைவிட சிறுபான்மை மக்களின் இருப்பு சார்ந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் நிலைபாடுகளை எழுத்தாவனமாக நிறுவிக்கொள்ள வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஏனெனில் இப்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி சிறிது காலத்தில் சீராகும். அதன் பின்னர் மீளவும் இங்கு உயிர்பெற்றெழும் கோர அரக்கனாக இனப் பிரச்சினை இருக்கும்.

சிறுபான்மை சார்ந்த உரிமைக்காக பெரும்பான்மை மக்களிடமோ அல்லது அரசிடமோ நாம் கெஞ்ச வேண்டி இருக்கும். கடந்த காலத்தில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், ரணில்-பிரபா ஒப்பந்தம் என்று நமது கண்முன்னால் கிழித்தெறியப்பட்ட தீர்வுக்கான முன்னெடுப்புகளை நோக்காகக் கொண்ட ஒப்பந்தங்களை மறந்து விட்டு காரியமாற்ற முடியாது.

ஏனெனில் இப்போது நாடு சிக்கித் தவிக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில்தான் தீர்வு கண்டுகொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனால்தான் சர்வகட்சி அரசாங்கம் குறித்து அதிகம் பேசப்படுகின்றது.

இப்பிரச்சினையை அரசியல் ரீதியில் தீர்க்க முனையும் போது சிறுபான்மை மக்களின் தலைமைகள் கட்டாயம் தம் மக்களுக்கான அரசியல் உரிமை, மற்றும் இருப்பு சார்ந்த அனைத்துக்குமான தீர்வுப்பொதியொன்றின் எழுத்து மூல உத்தரவாதப்படுத்தலை அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதை விடுத்தால் இனியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுடனான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படக் காரணமே எதிர்க்கட்சி அரசியல்தான். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒரு முடிவுக்கு வருவதால் எதிர்ப்பதற்கும் கிழிப்பதற்கும் யாருமில்லை என்று எடுத்துக் கொள்ள முடியும்.

எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏகோபித்து நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மட்டுமல்ல இனங்களுக்கிடையான பிரச்சினைக்கும் தீர்வு கண்டால் மட்டுமே எதிர்கால சந்ததி இப்போது நாம் எதிர்பார்க்கும் வலுவான அமைதியையும் அபிவிருத்தியையும் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் கண்டுகொள்ளவும் நிலைப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இல்லாவிட்டால் எல்லாம் தற்காலிக ஏற்பாடுகளாக மட்டும் போய் முடியும். மிக அறிஜீவித்துவமாக நாம் நமது மக்களுக்காக முடிவெடுக்க வேண்டிய தருணமாகும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!