தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் இறங்கிய ஸ்பெஸ்ஜெட் விமானம்
டெல்லியில் இருந்து துபாய்க்கு நேற்று ஸ்பெஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. போயிங் 737 மேக்ஸ் ரக விமானமான அதில் 138 பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இடது புற டாங்கில் எரி பொருள் குறைந்திருப்பதாக காட்டியது.
இதையடுத்து விமானத்தை பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அங்கு விமானத்தை தரை இறக்கினர்.
உடனே விமானத்தை என்ஜினீயர்கள் ஆய்வு செய்ததில் டாங்கில் இருந்து எரிபொருள் கசிவு இல்லை என்பது தெரிந்தது. இந்திய விமானத்தில் இருந்து பயணிகளை மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மாற்று விமானம் மும்பையில் இருந்து கரர்ச்சி விமான நிலையத்தை சென்றடைந்தது. கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்த 138 பயணிகளும் மாற்று விமானத்தில் ஏற்றப்பட்டு துபாய் புறப்பட்டு சென்றனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் இந்திய பயணிகள் 11 மணி நேரம் தவித்தப்படி இருந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.
கடந்த 17 நாட்களில் ஸ்பெஸ்ஜெட் விமானங்களில் 7-வது முறையாக கோளாறு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரிக்கிறது.



