9 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க் - குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவுவதாக கருத்து
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார்.
பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன. இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து" என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.