தினமும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்- டுவிட்டர் நிறுவனம் தகவல்
சமூக ஊடகங்களில் சமீப காலமாக போலி கணக்குகளை தொடங்கி மோசடி செய்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போலி கணக்குகள் பெரும்பாலும் மோசடி செய்வதற்கும், தவறான தகவல்களை பரப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
விளம்பரதாரர்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பணத்தை எந்த வழியில் அதிகமாக செலவிடுகிறார்கள் என்பதை கண்டறிந்து போலி கணக்குகளை தொடங்கி அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
இதன்மூலம் பொதுமக்கள் பலர் பண இழப்புக்கு ஆளாகிறார்கள். டுவிட்டர் மூலமும் இந்த போலி கணக்குகள் தொடங்கப்பட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன் வந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரை தினமும் பயன்படுத்துபவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தானியங்கி போலி கணக்குகள் வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டாவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார்.
டுவிட்டர் இந்த போலி கணக்குகளின் எண்ணிக்கையை மிகவும் குறைத்துக் காட்டியுள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை கண்டுபிடிப்பதற்கான மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது.
இந்த மாநாட்டில் டுவிட்டர் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது தினமும் 10 லட்சம் போலி கணக்குகளை நீக்குவதாக மாநாட்டில் பேசிய டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்