இங்கிலாந்து புதிய பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினர்
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா பெருந்தொற்றை சரிவர கையாளாதது,
கொரோனா காலத்தில் மது விருந்து நடத்தி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணை தலைமை கொறடா மீது தாமதமாக நடவடிக்கை எடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதார மந்திரி சாவித் ஜாவித் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
அவர்களை தொடர்ந்து முக்கிய பதவிகளில் இருந்த பலரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் வேறு வழியில்லாமல் போரிஸ் ஜான்சன் நேற்று கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். அதே நேரம் மற்றொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், தாம் பிரதமர் பதவியில் தொடரப் போவதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவார்கள் எனவும் அவர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் 2 பேர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
வடக்கு யோர்க்-ஷயர் தொகுதியில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அதற்கு முன்னதாக வருவாயை கையாளும் கருவூலக அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய பணிகளால் பிரபலமானார்.
இதேபோல அமைச்சரவை அட்டர்னி ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சூவெல்லா பிரேவர்மேனும் புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர்கள் தவிர புதிய நிதி அமைச்சர் நாதிம் ஸஹாவி, வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், உள்துறை அமைச்சருமான பிரீதி படேல் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.