கருப்பின வாலிபர் கொலை- அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்காவின் மினிசோட்டாவை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட். கருப்பின வாலிபரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அதற்காக அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் கடைக்காரருக்கு ஏற்பட்டது. எனவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்ததை கண்டதும் ஜார்ஜ் பிளாய்ட் அங்கிருந்து தப்பியோடினார். அவரை விரட்டி சென்று பிடித்த போலீஸ் அதிகாரி டெரிக் சாவின், கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் காலை அழுத்தி நெருக்கினார்.
இதில் மூச்சு திணறிய ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க போலீஸ் அதிகாரி மனித உரிமையை மீறிவிட்டதாக உலகம் முழுவதும் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது மினிசோட்டா மாநில கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மாநில கோர்ட்டு 22 அரை ஆண்டுகள் தண்டனை வழங்கியது.
இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்டு மீதான மனித உரிமை மீறலை கண்டித்து தொடரப்பட்ட வழக்கு அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த பெடரல் கோர்ட்டு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 21 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மாநில ஜெயிலில் இருந்து மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.