டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் டுவிட்டரில் 20 - 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதன் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
ஆனால், 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளதாக டுவிட்டர் நிறுவனம தெரிவித்து வந்தது. இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட்டர் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவு செய்ய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.