இன்றைய வேத வசனம் 11.07.2022: ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்..
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்..
1 கொரிந்தியர் 10:24
ரயிலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஜான்வி தனது புத்தகத்தின் வாக்கியங்களை அடிக்கோடிட்டு, குறிப்புகளை எழுதுவதில் மும்முரமாக இருந்தாள். ஆனால் அருகில் அமர்ந்திருந்த தாய்க்கும் குழந்தைக்கும் இடையே நடந்த உரையாடல் அவளை நிறுத்தியது.
அம்மா தனது நூலகப் புத்தகத்தில் கிறுக்கி வைத்ததற்காக குழந்தையை திட்டிக்கொண்டிருந்தாள். தான் பேனாவைக் கொண்டு குறிப்பு எடுப்பதைப் பார்த்து, அந்த குழந்தையும் அவ்வாறு தொடர்ந்து செய்யக்கூடாது என்பதற்காக, ஜான்வியும் தன்னுடைய பேனாவை கீழே வைத்தாள்.
நூலகப் புத்தகத்தை சேதப்படுத்துவதற்கும் உங்களுக்குச் சொந்தமான புத்தகத்தில் குறிப்பு எடுப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் குழந்தைக்குப் புரியாது என்பது அவளுக்குத் தெரியும்.
ஜான்வியின் செயல்கள், “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு” என்று 1 கொரிந்தியர் 10:23-24இல் உள்ள அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டியது. அவ்வாறு நீங்கள் கூறினாலும், எல்லா காரியங்களும் நன்மையை தராது.
“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”
கொரிந்து பட்டண திருச்சபையின் விசுவாசிகள் கிறிஸ்துவில் தங்களுடைய சுதந்திரத்தை தனிப்பட்ட நலன்களைத் தேடுவதற்கான ஒரு வாய்ப்பாய் கண்டனர். ஆனால் மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பக்திவிருத்தி உண்டாக்கவும் அவர்கள் அதை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
மெய்யான சுதந்திரம் என்பது ஒருவருக்கு விருப்பமானதைச் செய்வதற்கான உரிமை அல்ல; ஆனால் தேவனுக்கு அவர்கள் செய்ய வேண்டியதை செய்வதற்கான சுதந்திரம் என்று அவர் அவர்களுக்குக் கற்பிக்கிறார்.
நாம் நமக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக மற்றவர்களுக்கு பக்திவிருத்தியுண்டாக நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தும் போது நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம்.