கோட்டாபய உட்பட 19 பேர் தப்பி ஓடும் முயற்சியில் - உகண்டாவில் இருந்து மத்தளவுக்கு விரையும் ஜெட்
சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உட்பட 19 பேர் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும் அவர்கள் மத்தள விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் செல்ல தயாராக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குரல் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரல் பதிவில் பேசும் நபர் யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அத்துடன் கொள்ளையிட்ட பணத்துடன் நாட்டில் இருந்து இவர்கள் புறப்பட்டுச் செல்ல இடமளித்தால், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த குரல் பதிவில் பேசும் நபர் கூறியுள்ளார்.
அந்த குரல் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“மிக முக்கியமான தகவல் ஒன்று எமக்கு கிடைத்தது. விமானப்படைக்கு சொந்தமான பெல் உலங்குவானூர்தியில் கோட்டாபய ராஜபக்ச உட்பட 19 பேர் மத்தள விமான நிலையத்திற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
மத்தளயில் இருந்து தனிப்பட்ட ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் செல்ல உள்ளனர். உகண்டாவில் இருந்து அந்த ஜெட் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.
மத்தள, ஹம்பாந்தோட்டை மக்களே உங்களதும் உங்களது பிள்ளைகளினும் திருடிய பணத்தை எடுத்துச் செல்ல உள்ளனர். எவரையும் தப்பிச் செல்ல இடமளிக்க வேண்டாம்.
இவர்களை மத்தள விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தால், மத்தள விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், முகாமையாளர் ஆகிய இருவரும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். தனிப்பட்ட ரீதியில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
இந்த விமானம் செல்ல இடமளிக்க வேண்டாம் என வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரை கேட்டுக்கொள்கிறோம். இது தனிப்பட்ட விமானம், எந்த நாட்டிலும் பதிவு செய்யப்பட்ட விமானமல்ல.
இவர்கள் கொள்ளைக்கூட்டம். நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட்டே தப்பிச் செல்ல பார்க்கின்றனர். 19 பேர் இருக்கின்றனர். பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், இரண்டு முன்னணி வர்த்தகர்கள் அவர்களுடன் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல தயாராக இருக்கின்றனர். இது போராட்டத்தின் இறுதி கட்டம். கொள்ளையிட்ட பணத்தை நாட்டுக்கு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
பணத்தை எடுத்துச் செல்வதை தடுத்து, இவர்களை நாட்டிற்குள் தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்திற்கு செல்லுங்கள். புறப்பட்டுச் செல்ல இடமளிக்க வேண்டாம்” என குரல் பதிவில் பேசும் நபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறானும் இந்த குரல் பதிவின் உண்மை தன்மை தொடர்பில் உறுதிப்படுத்திய மூலங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்த போதிலும் பொதுஜன பெரமுனவின் உயர் மட்ட தலைவர்கள் எவரும் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் போலியானவை எனவும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.