சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் மூடல்
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன.
தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் உருமாறிய கொரோனா வைரசால் தற்போது சில நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கு கடந்த சில நாட்களாக பாதிப்பு 400-ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில், தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த பிராந்தியத்தில் தான் உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.
இதற்கிடையே பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமலாக்கப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.