கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை விமானப்படை இன்று (13) காலை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற விமானமொன்றை வழங்கியதாக அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு- குடியகல்வு மற்றும் சுங்க விதிகளுக்கு அமையவே, இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றும் இலங்கை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமையவே, ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் இருவர் ஆகியோர் இன்று (13) அதிகாலை 3 மணியளவில் மாலைத்தீவு செல்வதற்கு விமானம் ஒன்றை வழங்கியதாகவும் இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.