மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் - மைத்திரி

Nila
2 years ago
மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் - மைத்திரி

ஜனாதிபதி  மற்றும்  பதில் ஜனாதிபதி ஆகியோருக்கு மக்களாணை கிடையாது. இவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளை செயற்படுத்துவது குறித்து பாதுகாப்பு தரப்பினர் பலமுறை சிந்திக்க வேண்டும். நாட்டை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்காமல் மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகள் நாட்டில் தற்போது இடம்பெறுகின்றன. அதிகாரத்தின் மீது பேராசை கொண்ட தரபபினரால் நாடு முழுமையாக சீரழிந்துள்ளது.

அரச நிர்வாகம் என்பது நாட்டினதும்,நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். தனிப்பட்ட அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவது சிறந்த தீர்வாக அமையாது. அரசியல் வரலாற்றில் அதிகார பேராசை கொண்டவர்களினால் நாட்டுக்கு அழிவு மாத்திரமே நேர்ந்துள்ளது.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் அதிகாரம் தனி நபரின் வசமாக்கப்பட்டபோது 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் ஊடாக அது மாற்றியமைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தை தனக்கு ஏற்றாட்போல் உருவாக்கி முழு நாட்டையும் இல்லாதொழித்தார்.

நாட்டு மக்களினதும்,போராட்டத்தில் ஈடுப்படுபவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாதுகாப்பு தரப்பினருக்கு உண்டு.ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்.

ஜனாதிபதிக்கும்,தற்போதைய பதில் ஜனாதிபதிக்கும் மக்களாணை கிடையாது. இவர்களின் ஆணைகளை செயற்படுத்தும் போது பாதுகாப்பு தரப்பினர் பலமுறை சிந்திக்க வேண்டும். நாட்டை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்காமல் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும்.