விலைக்கு வாங்கும் ஒப்பந்தம் ரத்து- எலான் மஸ்க் மீது டுவிட்டர் வழக்கு
உலகின் பெறும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். இதையடுத்து 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3.4 லட்சம் கோடி) எலான் மஸ்க்-டுவிட்டர் நிர்வாகம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை டுவிட்டரிடம் எலான் மஸ்க் தரும்படி கேட்டார்.
ஆனால் அந்த விவரங்களை தர மறுத்ததால் டுவிட்டர் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த 9-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார்.
ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் டெலவர் கோர்ட்டில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், ஒப்பந்தத்தில் தெரிவித்த தொகைக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க்குக்கு உத்தரவிடுமாறும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளது.
மேலும் டுவிட்டர் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கான கடமைகளை மதிக்க எலான் மஸ்க் மறுத்து உள்ளார். அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இனி அவரது தனிப்பட்ட நலன்களுக்கு சேவை செய்யாது. டுவிட்டர் நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகளை சீர்குலைத்து பங்குதாரர் மதிப்பை அழித்து விட்டு எலான் மஸ்க் விலகி செல்கிறார் என்று டுவிட்டர் நிர்வாகம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.