கொலம்பியா தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு- 11 தொழிலாளர்கள் மரணம்
கொலம்பியாவில் கனமழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்து உள்ளனர். ஆன்டியோகியா: கொலம்பியா நாட்டில் மலைத்தொடர்கள் அதிகம்.
அவ்வப்போது கனமழையும் பெய்யும். அந்நாட்டில் உள்ள வீடுகள் சாதாரண முறையில் கட்டப்பட்டு உள்ளன. இதனால், பரவலாக அந்த நாட்டில் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி நகராட்சி பகுதியில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.
அதிகாரபூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் நிலச்சரிவின் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு தெரிவித்து உள்ளது.
இந்நிலச்சரிவில் சிக்கி தங்க சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஆன்டியோகியா கவர்னர் அனிபல் கவிரியா, வலி தரக்கூடிய சோகம் என டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.