இன்றைய வேத வசனம் 15.07.2022: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி… அப்போஸ்தலர் 16:31
ஜேம்ஸ், தனது மேல் அங்கியை அணிந்துகொண்டு, சிறைச்சாலையின் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மின் அருகில் நடந்து, தற்காலிகமாய் ஏற்படுத்தப்பட்டிருந்த குளத்தில் இறங்கினார்.
அங்கு அவன் சிறைச்சாலை போதகரால் ஞானஸ்நானம் பெற்றார். அவரோடு சிறைச்சாலையில் இருக்கும் அவரது மகளான பிரிட்டனியும் அதே நாளில், அதே தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றாள் என்பதைக் கேள்விப்பட்டபோது, ஜேம்ஸ் மகிழ்ச்சியடைந்தார்.
என்ன நடந்தது என்பதை உணர்ந்ததும், அங்கேயிருந்த சிறை ஊழியர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். “அங்கே ஒரு கண் கூட கலங்காமல் இல்லை,” என்று போதகர் கூறினார். பல ஆண்டுகளாக சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயுமாக இருந்த, பிரிட்டானி மற்றும் அவரது அப்பா இருவரும் தேவனின் மன்னிப்பை விரும்பினர். தேவன் அவர்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார்.
மற்றொரு சிறைச்சாலை சந்திப்பை வேதம் விவரிக்கிறது.
இந்த முறை இயேசுவின் அன்பு, சிறை அதிகாரியின் முழு குடும்பத்தையும் மாற்றியது. ஒரு பயங்கரமான நிலநடுக்கம் சிறைச்சாலையை உலுக்கிய பிறகு, “கதவுகளெல்லாம் திறவுண்டது.” பவுலும் சீலாவும் ஓடவில்லை, ஆனால் அவர்களது அறையிலேயே இருந்தனர் (அப்போஸ்தலர் 16:26-28). சிறைச்சாலைக்காரன், அவர்கள் தப்பியோடவில்லை என்ற நன்றியுணர்வுடன், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இறுதியில் அவனுடைய வாழ்க்கையை மாற்றும் அந்த கேள்வியைக் கேட்டான்: “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” (வச. 30).
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (வச. 31) என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நீயும் உன் வீட்டாரும்” என்ற பதிலானது, தனிநபர்கள் மீது மட்டுமல்ல, முழு குடும்பத்தின் மீதும் இரக்கத்தைப் பொழிவதற்கு தேவனின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
தேவனின் அன்பை எதிர்கொண்டு, “தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்” (வச. 34). நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்புக்காக நாம் அடிக்கடி ஆர்வமாக இருந்தாலும், தேவன் நம்மை விட அதிகமாக அவர்களை நேசிக்கிறார் என்று நம்பலாம். அவர் நம் அனைவரையும், நம் முழு வீட்டையும் புதுப்பிக்க விரும்புகிறார்.