ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா

Prasu
2 years ago
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா

தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. 

தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. 

அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. 

அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், சுமார் 500 ரஷிய வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும் உக்ரைன் அணுசக்தி நிறுவன தலைவர் கூறி உள்ளார். 

ரஷிய வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கான அழுத்தம் போதுமான அளவில் இல்லை என்றும், இந்த விஷயத்தில் உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே சமமான நிலைப்பாட்டை எடுத்து சர்வதேச அணுமின் நிறுவனம் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.