பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்: இம்ரான் கான்
பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார்.
மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 20 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.
இம்ரான்கான் கட்சி 15 இடங்களில் வெற்றிபெற்றது. நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி 4 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் வெற்றியை தொடர்ந்து நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைத்தன்மையின்மையில் இருந்து விடுபட நியாயமான பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தபடவேண்டும்.
என்னை ஆட்சியில் இருந்து நீக்கியபோது பொதுத்தேர்தல் நடத்தவேண்டுமென நான் அறிவித்தேன். ஆனால், என் முடிவை கோர்ட்டு நிராகரித்துவிட்டது. ஆனால், என் முடிவு சரியானது தான் என நான் இன்னும் நம்புகிறேன்' என்றார்.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென இம்ரான்கான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.