பிரிட்டன் பிரதமர் தேர்தல் - இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த 3 சுற்று தேர்தல்களில் 4 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 4வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த 2 சுற்று தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்து முன்னிலை வகித்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் 4-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதிலும் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். மொத்தமுள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவருக்கு அடுத்தபடியாக வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ்சுக்கு 71 வாக்குகள் கிடைத்தன.
இதன்மூலம் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது. 120 ஓட்டுகள் பெறுபவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார்.
வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.