போர் தீவிரமடையும் காலகட்டத்தில் மனைவியோடு போஸ் கொடுத்த ஜெலன்ஸ்கி
உக்ரைன் நாட்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் மனைவியோடு ஒரு இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது.
ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தபட்சம் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களில் 10 ஆயிரம் பேர் போரில் பலியாகியுள்ளனர்.
இம்மாதம் 19ஆம் தேதி வரை 96 லட்சம் மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி பிற பகுதிகள் அல்லது வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். இதனிடையே உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் மனைவி ஒலேனாவுடன் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டை படத்திற்காக புகைப்படம் எடுக்க நேரம் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகைப்படங்கள் அடுத்த மாதம் அந்த இதழில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த இணையதளவாசிகள் கொந்தளித்தனர். நாடு போரால் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், அதிபர் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்ததை பலரும் கண்டித்திருக்கிறார்கள்.