இலங்கை சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அவசரகாலச் சட்டம்!

Nila
2 years ago
இலங்கை சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அவசரகாலச் சட்டம்!

அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான நாடாளுமன்றின் அங்கீகாரம், சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் என்ற அளவில் சுற்றுலாத்துறை எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நாடாளுமன்றம் நேற்று அவசரகால சட்டத்தை ஒரு மாதத்துக்கு நீடிக்க அனுமதி வழங்கியமையானது, எதிர்மறையான விளைவைக் கொண்டு வரும் என்று அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நாட்டிற்கு சுற்றுலாத்துறையினரின் வருகை மேலும் குறையும். அத்துடன் சுற்றுலாவுக்கான விளம்பரங்களை கூட மேற்கொள்ளமுடியாது என்று இலங்கை விருந்தகச் சங்கத் தலைவர் எம். சாந்திகுமார் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அதிக தாமதமின்றி நீக்குவார் என்று சுற்றுலாத்துறையினர் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே பல நாடுகள், இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ள நிலையில் அவற்றை அகற்றுவதை தற்போதைக்கு எதிர்பார்க்கமுடியாது என்றும் எம். சாந்திகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டுக்கு எதிரான பயண ஆலோசனைகளால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வருவதில்லை.

அத்துடன், அவசரநிலை விதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், பயணக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராது.

இது சுற்றுலாத்துறைக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று இலங்கை விருந்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்துள்ளார்.