ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணம்

Prabha Praneetha
2 years ago
ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணம்

ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

இந்த ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரப்போகும் நம்முடைய முன்னோர்களை எப்படி வரவேற்பது? ஆடி அமாவாசை நாளில் என்ன தானம் கொடுப்பது என்று பார்க்கலாம்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"

தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்களாகும். இந்த நாட்களில் நாம் சில பொருட்களைத் தானமாக தர வேண்டும்.

ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.

அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். 

மனோகாரகன் சந்திரன் சந்தோஷமடைந்தால் நம்முடைய மனதும் சந்தோஷம் அடையும். மகிழ்ச்சியான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நிச்சயம் வெற்றி பெறும். சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.

எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். 

பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். 

ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை என்பது தனி சிறப்பிற்குரியது. ஆடி மாதம் முழுவதும் தெய்வ வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மாதத்தில் வரும் அமாவாசை பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமானது.

அன்றைய நாளில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களையும், நல்லனவைகளையும் தரவல்லது. இத்தகைய சிறப்பு மிகுந்த இந்த நாளை தவற விட்டு விடாதீர்கள். ஆடி அமாவாசை விரதத்தை எப்படி மேற்கொள்வது? அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி அமாவாசை அன்று அதிகாலையிலேயே எழவேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு விரதம் மேற்கொள்பவர்கள் உபவாசம் இருக்க வேண்டும். உங்கள் முன்னோர்களை நினைத்து நீங்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் அவர்களின் ஆசி உங்களது குடும்பத்திற்கும் சேர்த்து நிச்சயம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் முன்னோர்களின் ஆசி நம்முடன் இருந்தால்தான் நம்மால் சுபிட்சமான வாழ்க்கை வாழ முடியும். மாதம் தவறாமல் அமாவாசை விரதத்தை மேற்கொள்பவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை எப்பொழுதும் சந்தித்து கொண்டே இருப்பார்கள்.

அமாவாசை தினத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து கட்டாயம் குளிக்கக்கூடாது. 
விரதம் இருப்பவர்கள் சாதாரணமாக தலைக்கு குளித்தாலே போதுமானது. உங்கள் வீட்டில் எத்தனை பேர் இறந்து போய் இருக்கிறார்களோ அத்தனை இலைபோட்டு அவர்களின் படம் வைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை சமைத்து படையல் போட வேண்டும்.

ஒரு சொம்பில் தண்ணீரில் கருப்பு எள் கலந்து வைக்க வேண்டும். பசு மாட்டிற்கு கட்டாயம் அகத்திக்கீரை, வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி இவற்றில் உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

அதன் பின் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை வழிபட்ட பிறகு ஒரு தாம்பூலம் வைத்து எள் கலந்த தண்ணீரை உங்களது வலது கைகளில் ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து பிடித்துக்கொண்டு மூன்று முறை நீரை இரைக்க வேண்டும். எள்ளும் தண்ணீரும் கலந்த கலவை இரைக்கும் பொழுது பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி அவ்வளவு தொலைவில் இருக்கும் பித்ரு லோகத்திற்கு நம்முடைய வேண்டுதல்கள் சென்றடைகின்றன என்பது ஐதீகம்.

பித்ரு லோகத்தில் மூலிகையாக புடலங்காய் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதற்கு அடியில் தான் பித்ருக்கள் இளைப்பாறுவதாக கூறப்படுகிறது. அதே போல் பசுந்தயிர் பித்ருக்களுக்கு இஷ்டமாக இருக்குமாம். அதனால் நீங்கள் படைக்கும் படையலில் புடலங்காய், பசுந்தயிர் இருப்பது தனிச்சிறப்புடையது. பூஜைகள் முடிந்த பின்னர் காக்கைக்கு இலையில் உணவு வைக்க வேண்டும். காக்கை உணவு உண்டபின் நீங்கள் உணவருந்தலாம்.

அமாவாசை தினத்தில் கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினத்தில் காய்கறிகள், வஸ்திரம், அரிசி போன்றவற்றை தானம் அளிப்பதால் பெறற்கரிய பேறு கிட்டும் என்கிறது சாஸ்திரங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்து உங்களின் முன்னோர்களின் ஆசியை முழுமையாக பெற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் எப்பேற்பட்ட கர்ம வினைகளும் நிச்சயம் தீரும்.

நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!