அவுஸ்திரேலியாவில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சவூதி நாட்டு சகோதரிகள்
சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய அஸ்ரா அப்துல்லா அல்செஹ்லி மற்றும் 23 வயதுடைய அமல் அப்துல்லா அல்செஹ்லி என்ற இரு சகோதரிகள் ஜூன் மாதம் 7ம் தேதி சிட்னியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக, அவர்களின் மரணம் தொடர்பில் அதிகாரிகளுக்கு துப்புத்துலங்காமல் மர்மமான நிலையில் நீடித்து வருகிறது.
இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களின் பெயர் மற்றும் தகவல்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சகோதரிகள் இருவரும் தங்கியிருந்த குடியிருப்பில் அவர்களுக்கான அஞ்சல் பெட்டியில் கடிதங்கள் குவிந்திருப்பதை அறிந்த குடியிருப்பு மேலாளர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையிலேயே சகோதரிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, சகோதரிகள் இருவரும் நான்கு வாரங்களாக தங்களது குடியிருப்பில் வாடகை செலுத்தத் தவறிவிட்டதும், அவர்கள் தொடர்பில் விசாரிக்க காவல்துறையினர நாடியுள்ளனர்.
இங்கு இருவரது சடலமும் அழுகிய நிலையில் காணப்பட்டதால், இருவரும் இறந்து சில வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
மேலும், அவர்களது குடியிருப்புக்குள் அத்துமீறி எவரும் நுழைந்த அடையாளங்களும் காணப்படவில்லை.
அவர்கள் உடலில் காயங்களும் இல்லை என்பதால் இந்த வழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.