புதைக்கப்பட்ட 10 தொன் தங்கம் தோண்டி எடுக்க அனுமதி
போலந்தில் 18ம் நூற்றாண்டு அரண்மனை ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 10 தொன் தங்கப் புதையலை தோண்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற வேளை ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக நாஜி நிர்வாகம் திரட்டிய நிதியின் ஒருபகுதி இதுவென கூறப்படுகிறது.
செல்வந்தர்களான ஜேர்மானியர்கள் நாஜிகளின் Protection Squadron அமைப்புக்கு பொருள் உதவி மற்றும் நிதியளிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, காவல்துறை தலைமையகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பெட்டகமானது திடீரென்று மாயமானது. அதுவே தற்போது போலந்தின் வ்ரோக்லா நகருக்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த புதையல் தொடர்பில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளும் அதை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
18ம் நூற்றாண்டு அரண்மனை ஒன்றில் அந்த பெட்டகம் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளது எனவும், செப்ரெம்பர் 1ம் திகதி தோண்டி எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னொரு அரண்மனையில் 28 தொன் அளவுக்கு நாஜி தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.