சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவேன் என ஜனாதிபதியிடம் கூறவில்லை: விமல்

Prathees
2 years ago
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவேன் என ஜனாதிபதியிடம் கூறவில்லை: விமல்

சர்வகட்சி ஆட்சியில் இணைவேன் என்று யாரிடமும் சொல்லவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய ஒருமைப்பாட்டு சக்தி கூட்டணியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக கூறியதை மேற்கோள்காட்டி இதுவரை வெளியான செய்திகள் சரியானதல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக உருவாகியுள்ள இத்தருணத்தில், இந்த இடைவெளியைக் கடப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே சரியான பதில் என்பதை நாட்டுக்கு முதலில் சுட்டிக்காட்டியவர்கள் நாங்கள்.

இந்த பிரேரணையை கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாம் எழுத்து மூலம் சமர்ப்பித்ததையும் அவர் அதனை முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து திரு.கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததன் பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் திரு.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின் தற்போதைய நிர்வாகம் பெறாத ஒருமைப்பாடு விரைவில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக, மக்கள் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய சர்வகட்சி தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.

அது மாத்திரமன்றி, தேசிய சுதந்திர முன்னணியாகிய நாங்கள் ஜூலை 28 அன்று, தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் வளர்ச்சியடையாமல் தடுப்பதற்கும், குறிப்பிட்ட காலத்திற்குள் நெருக்கடியைத் தணிக்க குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கும் 12 முன்மொழிவுகள் அடங்கிய தீர்மானத்தை முன்வைத்தோம். சட்டத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கியுள்ளோம்.

அத்துடன், குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக அழைக்கப்படும் சர்வகட்சி மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய 10 முன்மொழிவுகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எங்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் 'குறைந்தபட்ச பொது தேசிய வேலைத்திட்டம்' குறித்து நாங்கள் கண்காணிப்போம். எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.