முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார் - மைத்திரிபால சிறிசேன

Kanimoli
2 years ago
முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார் - மைத்திரிபால சிறிசேன

அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது அந்த முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளையும் ஏற்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " தற்போதுள்ள எந்த நெருக்கடிகளும் எனது ஆட்சி காலத்தில் காணப்படவில்லை. எனது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஒரேயொரு கவலைக்குரிய விடயம் உயிர்த்த ஞாயிறு தின களாகும்.

அது குறித்து முன்னரே எனக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தால் , தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுத்திருப்பேன். இந்த தாக்குதல்களால் பயங்கரவாதிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவினால் கூட ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தாக்குதல்களை தடுக்க முடியாமல் போயிற்று.

எமது நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெறாவிட்டாலும் , வெளிநாட்டு யுத்தங்கள் எமது பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன. ரஷ்ய - உக்ரைன் யுத்தம் தொடரும் வரையில் எரிபொருள் நெருக்கடிகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறிருப்பினும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.