அவசரகாலச் சட்ட காலத்திலும் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Kanimoli
2 years ago
அவசரகாலச் சட்ட காலத்திலும்  கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை விதித்துள்ள போதிலும் நாட்டில் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி கூறுகிறது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“காவல்துறையினரின் கூற்றுப்படி கடந்த மே மாதம் முதல் இதுவரை 23 கொலைகள் பதிவாகியுள்ளன. காவல் நிலையத்திலும் கொலைகள் பதிவாகியுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஏனைய குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

அவசரகாலச் சட்டத்தை விதித்துள்ள போதிலும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டது.

நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. யுத்தமோ வன்முறையோ இல்லை, மாறாக அரசியல் போராட்டமே நடைபெறுகிறது.

ஆகையினால், நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி மீண்டும் கண்டனம் தெரிவிக்கிறது” என்றார்.