கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் கற்குவாரியில் விழுந்து உயிரிழப்பு
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு - நடந்தது என்ன ?
கடந்த வாரம் முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தமை உள்ளிட்ட பல கொலைச் சம்பவங்களுடன் குற்றம் சாட்டப்பட்டநிலையில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் ஒருவர் கற்குவாரியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபரை கடுவலை பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றிற்கு ஆயுதங்களை தேடுவதற்காக அழைத்து செல்லப்பட்ட போது அங்கு குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த பாதாள உலகக்குழுத் தலைவர் மறைந்த பாதாள உலகக்குழுவின் முக்கியஸ்தரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாவெனவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் களஞ்சியத்தைக் காட்டச் சென்ற போது கற்குவாரி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்க சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சந்தேக நபர் கற்குவாரியில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் பலத்த காயமடைந்த நிலையில், ஒருவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட கைகலப்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.